Saturday, March 3, 2018

வன்னிய குல க்ஷத்ரிய சோழ அரசி லோகமாதேவி

முதலாம் ராஜேந்திர சோழனின் தாய்
==================================
தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்
========================================

முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி.1012 - 1044) கும்பகோணம் திருவலஞ்சுழி கல்வெட்டு ஒன்று அவருடைய தாயின் பெயரைப் பற்றி குறிப்பிடுகிறது :-

"ஸ்ரீ இராஜராஜதெவ நம்பிராட்டியார் தந்தி சக்திவிடங்கியாரான ஒலொகமஹாதெவியார்" (S.I.I, Vol-VIII, No.237).

முதலாம் ராஜேந்திர சோழனை ஈன்ற தாயானவள், "வானவன் மாதேவியான திரிபுவனமாதேவி" ஆவார்கள். மேற்குறிப்பிடப்பெற்ற கல்வெட்டினில் இருந்து தெரியவரும் "தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்" அவர்கள் மற்றொரு தாய் ஆவார்கள். இந்த "சக்தி விடங்கியே" முதலாம் ராஜ ராஜ சோழனின் தலைமை பட்டத்தரசியாக விளக்கியிருக்கிறார்கள்.

முதலாம் ராஜ ராஜ சோழனுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள், மூத்தவன் ராஜேந்திர சோழன் மற்றும் இரண்டு பெண்களான மாதேவடிகளும் குந்தவையும். திருவையாறு உலோக மாதேவீச்சுரத்திலுள்ள ஒரு கல்வெட்டு மாதேவடிகள் பற்றி குறிப்பிடுவதால், தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியாரின் மகள் தான் "மாதேவடிகள்" என்பது ஏற்புடையதாகும்.

"தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்" அவர்கள், வன்னிய குல க்ஷத்ரிய காடவர் (பல்லவர்) மரபினில் தோன்றிய அரசியாவார்கள் என்பதை நமக்கு கி.பி.10 நூற்றாண்டின் திருப்பதி கல்வெட்டு புலப்படுத்துகிறது :-

"சக்திவிடங்கநாயகி ஸ்ரீ காடபட்டிகள் தெவியார் பல்லவப் பெற்கடையார் மகள் சாமவையாகிய காடவன் பெருந்தெவியென் ஸ்ரீவெங்கடத்து எழுந்தருளிநின்ற பெருமானடிகளுக்கு" (S.I.I, Vol-IV, No.62).

காடவன் சக்தி விடங்கனின் தேவியும், பல்லவ பெற்கடையாரின் மகளுமான "சாமவையாகிய காடவன் பெருந்தேவி" அவர்கள், திருப்பதி பெருமாளுக்கு பிரம்மிக்கத்தக்க வகையில் பல கொடைகளை வழங்கியிருக்கிறார்கள் என்பது சான்றுகளில் இருந்து தெரியவருகிறது.

"காடவன் சக்தி விடங்கன்" என்று கி.பி. 10 ஆம் நூற்றாண்டு திருப்பதி கல்வெட்டினில் இருந்து தெரிய வருவதால், சோழப் பெருவேந்தன் முதலாம் ராஜ ராஜ சோழனின் தலைமை பட்டத்தரசியான "தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்" அவர்கள், காடவன் சக்தி விடங்கனின் குடும்பத்தைச் சேர்த்தவர்கள் என்பது தெளிவாக தெரியவருகிறது.

"தந்தி சக்தி விடங்கி" என்கின்ற பெயரினின் முன் இருக்கும் "தந்தி" என்ற சொல்லானது, இரண்டாம் நந்தி வர்ம பல்லவனுடைய மகன், தந்தி வர்ம பல்லவனின் (கி.பி. 796 - 846) பெயரோடு பொருந்திவருகின்றது.



இரண்டாம் நந்திவர்ம பல்லவன், "காடவ வம்சத்தை உய்விக்க பிறந்தவன்" (One who was born to raise the prestige of the Kadava family) என்று குறிப்பிடப்பெற்றார்கள் (S.I.I, Vol-XII, Introduction-VIII). எனவே "தந்தி" என்ற சொல்லானது காடவர் வம்சத்தோடு தொடர்புடையது என்பதாகும்.



விஜயாலய சோழனின் மருமகளும், முதலாம் ஆதித்த சோழனின் (கி.பி.871 - 907) ராணியுமான பல்லவ அரசி "காடுவெட்டிகள் திரிபுவனமாதேவி வயிரியக்கன்" அவர்கள், வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த அரசியாவார்கள். அதாவது காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனின் முன்னோர் ஆவார்கள்.


எனவே, சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் திருமண உறவு இருந்திருப்பது என்பது தெளிவாக தெரியவருவதால், முதலாம் ராஜேந்திர சோழனின் தாயான "தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்" அவர்கள், வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த அரசியாவார்கள் என்பது முற்றிலும் உண்மையாகிறது.

"தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்" அவர்களின் திருவுருவமும் மற்றும் அவரது கணவரின் திருவுருவமும், அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூர், கங்காசடேஸ்வரர் கோயிலில் கற்சிற்பங்களாக இருக்கின்றன.

நன்றி திரு.N. Murali Naicker

No comments:

Post a Comment